Saturday, February 16, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து அரங்கக் கூட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் கீழே இமயத்தின் அடிவாரத்தில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னராட்சியால் பாதுகாக்கப்படும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையும், ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒழிந்து ஒரு மக்கள் குடியரசு மலரப் போகும் நாளுக்காக காத்திருக்கிறது நேபாளம்.

இந்தியா, சீனா என்ற இரு பெரும் நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் நேபாளம் ஒரு வளம் கொழிக்கும் நாடு. வற்றாத ஜீவநதிகளும் வளமான மண்ணும் இருந்த போதும் பாசன வசதிகள் செய்யப்படாததால் அங்கே விவசாயம் செழிக்கவில்லை. நாளொன்றுக்கு 80,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நீர்வீழ்ச்சிகள் நிறைந்திருந்த போதும் மின் உற்பத்தி இல்லை. கனிவளங்களும் காட்டுவளமும் நிறைந்திருந்த போதும் அங்கே தொழில் வளம் இல்லை. சோமாலியாவுக்கு நிகரான வறுமை, 50% எழுத்தறிவின்மை, கிராமப்புறங்களில் தலைவிறித்தாடும் சாதிய ஒடுக்குமுறை, 13 வயதில் சிறுமிகளை மணமுடித்துக் கொடுக்கும் பெண்ணடிமைக் கொடுமை- இதுதான் நேபாளம்.

நாட்டையே தன்னுடைய பரம்பரைச் சொத்தாகக் கருதும் மன்னர்குலம், நேபாளத்தை உலக பணக்காரர்களின் உல்லாசபுரியாகவும், சூதாடிகளின் சொர்க்கமாகவும் மாற்றியிருக்கிறது. சர்வதேசக் கிரிமினல் சார்லஸ் சோப்ராஜீம், சிறுநீரகத் திருடன் அமித்குமாரும், கொலைகார சங்கராசாரியும் தமக்குப் பாதுகாப்பான புகலிடமாக நேபாளத்தைத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே மன்னராட்சியின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள முடியும். நேபாளதின் மக்களோ, வயிற்றுக்காக இந்தியா முழுவதும் அலைந்து திரிகிறார்கள். பங்களாக்களில் காவல் நிற்கிறார்கள். ஆண்டுதோறும் நேபாளத்தின் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் மும்பை சிவப்பு விள்க்கு பகுதியில் விலைபேசி விற்கப்படுகிறார்கள். 'உலகின் ஒரே இந்து அரசு' என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பீற்றிக் கொள்ளும் நேபாள நாட்டின் நிலை இதுதான்!

இந்தக் கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக பல பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள் நேபாள மக்கள். 1990-இல் எழுந்த ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கத்தின் விளைவாக மன்னராட்சி, 'அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட மன்னராட்சியாக' வேடமணிந்து கொண்டது. இந்த அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை மன்னனுக்கு வழங்கியிருந்தது. எனவே, அடுத்த 12 ஆண்டுகளில் 12 முறை ஆட்சியை கலைத்தார், மன்னர். பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட அரசியல்வாதிகள் மன்னனிடம் சோரம் போயினர். மக்களிடம் செல்வாக்கிழந்தனர் .

இத்தகைய சூழலில், 1996-இல் மாவோயிஸ்டுகள் இரு குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். "மன்னராட்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். நேபாளம் ஒரு இந்து தேசம் என்பதை மாற்றி, மதச்சார்பற்ற குடியரசு என்று அறிவிக்க வேண்டும்" என்ற அவர்களது இரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆயுதப்போராட்டத்தை பிரகடனம் செய்தனர். நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையின் கீழ் குமுறிக்கொண்டிருந்த கிராமப்புற மக்களும் பழங்குடியினரும் செங்கொடியின் கீழ் அணிதிரண்டனர். மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு நாடெங்கும் பரவியது. கிராமப்புறங்களில் மக்கள் கமிட்டியின் அதிகாரம் நிறுவப்பட்டது. நிலச்சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு போன்ற புரட்சிகர மாற்றங்கள் செயலுக்கு வந்தன. மன்னராட்சி செல்லாக்காசானது.

மாவோயிஸ்டுகளின் வெற்றி, மன்னராட்சியை அச்சுறுத்திக் கொண்டுருந்த காலக்கட்டத்தில் தான் மன்னர் பிரேந்திராவின் குடும்பத்தையே படுகொலை செய்து விட்டு அரியணையில் ஏறினான் ஞானேந்திரா. மாவோயிஸ்டுகளைத் துடைத்தெறியப் போவதாகக் கொக்கரித்தான். "நேபாளத்தில் கம்யூனிஸ்டு புரட்சியைத் தடுப்பது எப்படி?" என்று வாஷிங்டனில் மாநாடு நடத்தியது அமெரிக்கா. ஞானேந்திராவின் இராணுவத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை வழங்கியது இந்திய அரசு. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நேபாள இராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் யாராலும் மாவோயிஸ்டுகளை ஒழிக்கவோ, மக்கள் எழுச்சியைத் தடுக்கவோ முடியவில்லை.

ஏப்ரல் 2006- இல் ஞானேந்திராவின் ஊரடங்குச் சட்டத்தையும் இராணுவத்தையும் மீறி, அரண்மனையை முற்றுகையிட்டார்கள் இலட்சக்கணக்கான மக்கள். மன்னராட்சியைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசும், அமெரிக்காவும் மேற்கொண்ட திரைமறைவு முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. "மன்னராட்சி ஒழிக! அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து! உழுபவனுக்கே நிலம் சொந்தம்! " என்ற முழக்கங்கள் இமயத்தில் மோதி உலகெங்கும் எதிரொலித்தன. 19 நாட்கள் நேபாளத்தை உலுக்கிய இந்த மக்கள் எழுச்சி மன்னன் ஞானேந்திராவைச் சரணடைய வைத்தது. மாவோயிஸ்டுகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தை நேபாளத்தின் நாடாளுமன்றக் கட்சிகளுக்கு ஏற்படுத்தியது. "இடைக்கால அரசியல் சட்டம், இடைக்கால அரசு, புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜனநாயகக் குடியரசு" என்று மாவோயிஸ்டுகள் முன்வைத்த முழக்கங்களை 7 நாடாளுமன்ற கட்சிகளும் ஏற்றுக்கொண்டதால், ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்து, இடைக்கால அரசில் இணைந்தார்கள் மாவோயிஸ்டுகள்.

மாபெரும் மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்ட மன்னராட்சியை கொல்லைப்புறம் வழியாக திணிப்பதற்கான சதிவேலைகளை அமெரிக்க இந்திய அரசுகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. நேபாளத்தின் தென் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்த நிராயுதபாணிகளான மாவோயிஸ்டு கட்சி உறுப்பினர்கள் 28 பேரை இந்திய எல்லைப் புறத்திலிருந்து கூலிப்படையை ஏவிக் கொலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். "நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அதை இந்திய இராணுவம் கைகட்டி வெடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது" என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்திருக்கிறார் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா. இந்தச் சீர்குலைவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் இந்திய உளவுத்துறை துணை நிற்கிறது.

இத்தகைய சதிவேலைகளின் விளைவாக, ஜுன் 2007-ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நவ. 2007-க்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஏப்ரல் 2008-க்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இறையாண்மையும் தற்சார்பும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக நேபாளம் உருவாக வேண்டும் என்பதே ஆகப் பெரும்பாண்மையான நேபாள மக்களின் விருப்பம். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் இந்திய ஆளும் வர்கங்களால் இதனை சகித்துக் கொள்ளமுடியவில்லை. நேபாளம் விடுதலை அடைந்தால் 'இந்திய நேபாள நட்புறவு ஓப்பந்தம்' எனும் அடிமை முறியின் மூலம் நேபாளத்தின் மீது தாங்கள் செலுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்கம் முடிந்து விடும் என்று அஞ்சுகிறது இந்திய அரசு. அந்நாட்டின் தொழிலையும் வணிகத்தையும் கட்டுப்படுத்தும் இந்தியத் தரகு முதலாளிகளும், பெரு வணிகர்களும் தாங்கள் அடித்து வரும் கொள்ளை முடிந்து விடுமோ என்று குமுறுகின்றனர். காங்கிரசு, பா.ஜா.க. கட்சிகளின் தலைமைப் பதவிகளில் அமர்ந்திருக்கும் குவாலியர், மேவார் அரச பரம்பரையினருக்கு நேபாள மன்னர் குடும்பத்துடன் மண உறவே இருப்பதால் அவர்கள் இரத்தப் பாசத்தால் துடிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக மாவோயிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முழக்கங்களுடன் ஒரு ஜனநாயகப் புரட்சி நேபாளத்தில் வெற்றி பெற்றால், அது உடனே இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்ற பீதி இந்திய ஆளும் வர்கங்களைப் பிடித்து ஆட்டுகிறது.

ஏற்கனவே, தெற்காசியப் பகுதியில் மேலாதிக்கம் செய்து வரும் இந்திய அரசு, தற்போது அமெரிக்காவின் இராணுவ அடியாட்படையாக அவதாரமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இந்திய அரசு, சிக்கிம் நாட்டை இணைத்துக் கொண்டது; பாகிஸ்தானை உடைத்து வங்கதேசத்தை உருவாக்கியது; பிறகு இலங்கைக்குப் படை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. இன்றும் சிங்கள பேரினவாத அரசுக்கு இராணுவ உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, நேபாளத்தின் சில கட்சிகளைத் தனது கைகூலிகளாக்கிக் கொண்டு, அந்நாட்டின் ஜனநாயகப் புரட்சியை நசுக்குவதற்காக இந்திய இராணுவம் தலையீடு செய்வத்ற்கான அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க அரசோ நேபாளத்தில் ஏற்கனவே வெளிப்படையாகத் தலையிடத் தொடங்கி விட்டது. ஆசியாவின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும், சீனாவையும் ரசியாவையும் கட்டுப்படுத்தவும், நேபாளத்தில் கால் பதிக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறது அமெரிக்கா. நேபாள புரட்சி அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு சவால் விடுகிறது. புரட்சியின் வெற்றி தோற்றுவிக்கும் அதிர்வலை உலகெங்கும் பரவுமென்பதால் பதறுகிறது அமெரிக்கா. தோண்டிப் புதைத்துவிட்டதாக இறுமாந்திருந்த தருணத்தில், 'கம்யூனிச பூதம்' எவரெஸ்டின் மீது ஏறி நின்று எக்காளம் செய்வதை ஏகாதிபத்தியவாதிகளால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

அமெரிக்க வல்லரசு, இந்திய மேலாதிக்கம், இந்து மதவெறி பாசிஸ்டுகள், நேபாளத்தின் மன்னர்குலம் உள்ளிட்ட ஆளும் வர்க்கம்... என்று ஒரு பெரும் அணிவரிசையை எதிர்கொண்டு நிற்கிறது நேபாளம். கடந்த பத்து ஆண்டுகளில் 13,000 உயிர்களை பலியிட்டு புரட்சியை வெற்றியின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறார்கள் நேபாள மக்கள். அவர்கள் வெற்றி பெற வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் முதல் புரட்சி எவரெஸ்டின் உச்சியிலிருந்து உலகைத் தட்டியெழுப்ப வேண்டும். ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்துக்கு எதிரான போரில் இந்தியத் துணைக்கண்டம் முன்நிற்க வேண்டும்.

நேபாளமும் இந்தியாவும் நிலப்பரப்பால் மட்டும் இணைந்திருக்கவில்லை. நாம் வரலாற்றாலும் பிணைக்கப்பட்டவர்கள். மன்னராட்சியின் கீழ் நேபாள மக்கள் அனுபவிக்கும் அதே நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைதான் 'மக்களாட்சியின்' கீழ் இந்திய மக்களும் அனுபவித்து வருகிறார்கள். நேபாளத்தின் இந்து அரசின் கீழ் அம்மக்கள் அனுபவித்துவரும் சாதிக்கொடுமைகளைத்தான், 'மதச்சார்பற்ற' இந்திய அரசின் கீழ் நம் நாட்டின் ஓடுக்கப்பட்ட சாதி மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

நேபாளத்தை சூறையாடும் இந்தியத் தரகு முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் தான் தனியார்மய தாராளமய கொள்கைகளின் மூலம் இந்திய மக்களையும் சூறையாடுகிறார்கள்.

நம்முடைய பொது எதிரிகள் அனைவரும் நேபாள மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். நாம் நேபாள மக்களின் இறையாண்மைக்கு ஆதரவாகவும், ஜனநாயக புரட்சிக்கு ஆதரவாகவும் அணிவகுத்து நிற்க வேண்டும். இந்திய மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்!

இந்திய மேலதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்!

நேபாளத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை முறியடிபோம்!

தமது விதியை தாமே தெரிவு செய்து கொள்ளும் நேபாள மக்களின் உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!

நேபாள ஜனநாயக குடியரசுக்குத் துணை நிற்போம்!

பங்கேற்போர்:

தலைமை: சுப.தங்கராசு
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு,தமிழ்நாடு.

உறையாற்றுவோர்:

த.வெள்ளையன்
தலைவர்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் போரவை

சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,திராவிட இயக்கத் தமிழர் போரவை

மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,தமிழ்நாடு

மற்றும் பலர்

சிறப்புறை:

பவன் பட்டேல்
பொதுச்செயலாளர்,
இந்திய-நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.

லட்சுமண் பந்த்
செயலர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்பு குழு,இந்தியா.

சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடைமைக் கட்சி,(மாவோயிஸ்டு)

நாள்: 19.02.08 மாலை 4 மணி
இடம்:பத்மராம் மகால்(ராம் தியேட்டர்),
83, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம்,சென்னை.

7 comments:

சூரியன் said...

தோழரே வணக்கம்

Sindhan R said...

பொதுவுடைமை வாதிகள் என்ற முறையில் நக்சல் தோழர்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு .. ஆனாலும் புரட்சிக்கு நீங்கள் அவசரப்படுவதாகவும் தோன்றுகிரது தோழ்ர்களே .. முற்றிய நிலப் பிரபுத்துவமும் முதலாளித்துவமும் இணைந்து நிற்கும் இந்திய துணைக்கண்டத்திற்க்கு இது பொருந்துமா? அதி தீவிரப் போக்கு உண்மயான மக்கள் புரட்சிக்கு வழிவகுக்குமா?

said...

/பொதுவுடைமை வாதிகள் என்ற முறையில் நக்சல் தோழர்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு .. ஆனாலும் புரட்சிக்கு நீங்கள் அவசரப்படுவதாகவும் தோன்றுகிரது தோழ்ர்களே .. முற்றிய நிலப் பிரபுத்துவமும் முதலாளித்துவமும் இணைந்து நிற்கும் இந்திய துணைக்கண்டத்திற்க்கு இது பொருந்துமா? அதி தீவிரப் போக்கு உண்மயான மக்கள் புரட்சிக்கு வழிவகுக்குமா?/

இரா.சிந்தன், நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், மக்களின் வாழ்நிலை மிகவும் தாழ்ந்துகொண்டே வருகிறது. பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். வேலையில்லாதோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக தண்ணீர் கூட விலைபொருளாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 80 கோடி பேரின் தின கூலி 20 ரூபாய்க்கும் கீழே உள்ளது. இப்பொது மக்கள் புரட்சி சாத்தியமில்லை எனில் எப்போது சாத்தியப்படும்?

Sindhan R said...

மக்களின் கோபம் முற்றும்போது அவர்கள் தானாகவே புரட்சிக்கு வித்திடுகிறார்கள் .. கம்யூனிஸ்டுகளோ அந்தக் கோபத்தை சரியான திசை நோக்கி வழி நடத்தி சோசலிஸ கட்டமைப்பை ஏற்ப்படுத்தச்செய்கிறார்கள் .. நேபாளம் போன்ற தேசங்களில் குறைந்தபட்ச சுதந்திர காற்றைக் கூட சுவாசித்திராத மக்கள் மாவோயிஸ்டுகளின் கீழ் திரண்டு ஆயுதமேந்தியதை நாம் பார்க்கிறோம் .. ஆனால் அவர்களே ஜனநாயக யுகத்தின் தேவையை உணர்ந்து .. நேரடி ஓட்டு அரசியலில் இறங்கியதையும் பார்க்கிறோம் .. போராட்ட வடிவம் மாறினாலும் .. வர்க்க குணமோ போராட்ட மூர்க்கமோ குறையப் போவதில்லை ...

மீண்டும் ... முற்றிய நிலப் பிரபுத்துவமும் முதலாளித்துவமும் இணைந்து நிற்கும் இந்திய துணைக்கண்டத்திற்க்கு இது (ஆயுதமேந்திய மக்கள் புரட்சி) பொருந்துமா? அதி தீவிரப் போக்கு உண்மயான மக்கள் புரட்சிக்கு வழிவகுக்குமா?

புரட்சி சாதியமா என்பது என்பது என்கேள்வியில்லை ... நானே அடித்துக் கூறுவேன் புரத்சியன்றி வேறு எந்த வகையிலும் அரசின் ஆட்சித் தத்துவத்தை மாற்ற முடியாது ...

ஆனால் நக்சல் வழியில் ... சாதியமா?

said...

இரா.சிந்தன்,

இந்தியாவில் புரட்சி என்பது நக்சல்பாரிகளின் வாயிலாகவே சாதிக்க முடியும் ஏன் எனில் நாடாளுமன்றத்தின் வாயிலாக ஒரு காலும் புரட்சியை நடத்த இயலாது. உதாரணத்துக்கு CPஈ, CPM போன்ற கட்சிகளையே எடுத்துக் கொள்ளலாம் அவர்களின் வர்க்க போராட்டத்தின் அவலத்தை நந்திகிராமத்திலும் அவர்களின் ஆட்சியின் கீழ் உள்ள மாநிலத்திலும் கண்கூடாக காணலாம்.மத்திய அரசை ஆதரிக்கும் அவர்கள் அதன் மூலம் சாதித்ததுதான் என்ன? நேபாளத்தில் நடந்திருப்பது இங்கு நடப்பதை போல் நாடாளூமன்றத் தேர்தல் இல்லை அது நாடாளுமன்ற சட்டத்தை இயற்றுவதற்கான தேர்தலாகும், இதுவும் பத்தாண்டுகளுக்கு மேலான போராட்டத்தில் விளைந்தது. அதிதீவிர போக்கு இல்லாத பாட்டாளி வர்க்கக் கட்சி பல சமரசத்தை ஏற்று அதன் சாரத்தையே இழக்கிறது. ஆயுதம் ஏந்திய புரச்சியின் மூலமே எதிரியை பணியவைக்க முடியும். நேபாளத்தில் மக்களின் போராட்டத்தை இராணுவம் ஒடுக்க முடியாததற்கு காரணம் மாவேயிஸ்டுகளின் மக்கள் படையின் பலமெ காரணமாக இருந்தது. மக்களின் மீது அடக்குமுறையை இராணுவம் ஏவியிருந்தால் அதை மாவேயிஸ்டுகள் முறியடித்து இருப்பார்கள்.

Sindhan R said...

// ஆயுதம் ஏந்திய புரச்சியின் மூலமே எதிரியை பணியவைக்க முடியும் //

??????????????

மன்னி்க்க வேண்டும் தோழா .. எனக்குத் தெரிந்தவரையிலும் ... போராட்ட வடிவத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான் ... இங்குதான் நீங்கள் அவசரப்படுவதாகவும் தோன்றுகிறது தோழ்ர்களே ..

said...

சிந்தன்,

நீங்கள் சொல்வது சரிதான். நம்முடைய எதிரி என்ன ஆயுதத்தை எடுக்க நிர்பந்திக்கும் ஆயுதம் எது என்று நீங்கள் கருதுகிறீர்கள்.