Friday, January 23, 2009

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

"முதலாளித்துவம்" இந்த வார்த்தைகள் நமக்கு பல ஆண்டுகளாக பரிச்சையமாக இருந்தாலும், முதலாளித்துவம் தன் கொடூரமான அனுகுமுறைகளால் நாம் பாதிக்கப்பட்ட போதும் உழைக்கும் மக்கள் பலரும் அதை முறியடிப்பதில், மாற்றுவழியை பயன்படுத்துவதில் முரண்பட்டு நிற்கிறோம். இந்த முரண்பாடுகளுக்கு சிபிஐ, சிபிம் போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பெரும் பங்கும் மறுப்பதற்கில்லை. தங்களுடைய தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களின் போர்குண‌த்தை மழுங்கடித்து, கட்டப்பஞ்சாயத்து செய்வது, முதலாளிக்கு கூஜா தூக்குவது, அவர்களோடு கைகோர்த்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து வந்துள்ளது. முதலாளிகளை எதிர்க்கும் அதேவேளையில் இந்த போலிகளை அடையாளம் கண்டு அவர்களின் பிழைப்புவாத சதியை முறியடிப்பதும் மிக அவசியமாகும்.

இன்று நாம் சந்தித்திருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்? முதலாளித்துவம் என்ற புதைகுழியில் சிக்கி இந்த உலகமே விழி பிதுங்குகிறது. முதலாளித்துவத்தின் அடித்தளம் மூலதனத்திலும் போட்டிகள் நிறைந்த வணிகச்சுதந்திரத்திலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மூலதனம் திரளும் வரையே முதலாளித்துவத்தின் வளர்ச்சி இருக்கும். இந்த மூலதனம் முதலாளிகளை உலகம் முழுவதிலும் தனக்கான சந்தைக்காக சுற்றித்திரிய வைக்கிறது. இன்று நாம் படும் அல்லல்களுகெல்லாம் காரணமான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற வக்கிரக்கொள்கைகளின் ஊற்றுக்கண் மூலதனத்தின் பெருக்கத்திலே தான் உள்ளது. இவைதான் நம் நாட்டையும் பன்னாட்டு நிறுவன‌ங்களின் வேட்டைக்காடாக்கி தொழில் போட்டியில் உள்நாட்டு தொழில்களையும் விவசாயத்தையும் அழித்து விட்டது.
இப்போது நம் நாட்டில் நடைபெறும் உற்பத்தி நம்முடைய தேச நலனுக்கானது அல்ல, அவை பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்பவையாகவே உள்ளது. தொழில்துறையிலும் விவசாயத்திலும் சுயசார்பை இழந்ததன் காரணத்தால் தான் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு உலகின் பல்வேறு பகுதியிலும் அதிர்வலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்த கொடூரமான நெருக்கடிகளால் எப்போதும் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதுமாக மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாளித்துவத்தின் கோர பிடிக்குள் இன்று உலகமே மூச்சுத்திணறி கொண்டிருக்கிறது. உலகத்தின் முதல் சோசலிச குடியரசை தந்திரம் செய்து வீழ்த்தி வீழ்ந்துவிட்டதாக கதை கட்டிவிட்ட முதலாளித்துவ‌ நரிகளும் வால் ஸ்ட்ரீட்டின் அதிபதிகளும் இன்று தலையில் துண்டைப்போட்டு மக்களின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து போகின்றனர். முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியம் இன்று உலகிற்கு அளித்த கொடை எண்ணிலடங்காது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களின் தினசரி வருமானத்தை ஒரு டாலருக்கும் குறைவாக ஆக்கியது முதற்கொண்டு இங்கே இந்தியாவில் 83.4 கோடி இந்தியர்களின் தினசரி வருமானத்தை 20 ரூபாய்க்கும் கீழாக குறைத்திட்டது வரை பட்டியல் நீள்கிறது. நம் நாட்டின் விலைவாசி உயர்வுக்கு காரணமான முன்பேர வர்த்தக சூதாட்டத்தில் ஆரம்பித்து குறைந்த கூலி உழைப்புக்காக ஊதிப்பெருக்கி இப்போது வெடித்துக்கிடக்கும் ஐ.டி துறையாகட்டும் எல்லாம் நம் கண் முன்னே அப்பட்டமாய் நடந்துகொண்டுதானிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நரகத்திற்குள் தான் நடத்துகின்றனர். இதற்கு அவர்களுக்கு தெரிந்த காரணம் விதி, ஜாதகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இவை மட்டுமே. முதலாளித்துவத்தை வீழ்த்த ஊதிய உயர்வு போராட்டங்கள் நடத்துவதும், பட்டினி போராட்டம் இருப்பது, ஈரத்துணி கட்டி கோமாளித்தனம் செய்வதும் நாமம் போட்டுக்கொண்டு காட்சித் கொடுப்பதும் தான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும்வழி. எந்த ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவதில்லை, அதை வீழ்த்தாமல் இந்த சமுதாய சிக்கல்கள் தீரப்போவதில்லை. எனவே கோர பசி கொண்ட திமிங்கிலத்தை வீழ்த்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரண்டு போராடுவதே சிறந்த வழி ஒரே வழி.