Tuesday, October 16, 2007

ஆசாத் என்ற மனிதன்

பிரிட்டிஷ் சர்க்காருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்படக்கூடும் என்று நாங்களும் நம்பினோ ம். அப்படியென்றால் இனி எங்களின் நிலைமை என்ன? நாங்கள் இனியும் போராடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை என்பது ஆசாத்துக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சியாளர்களாக இருக்கும்வரை, அவர்கள் மீது குண்டு வீச்சைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் ஆசாத்தின் நிலை.  'மூட்டை முடிச்சுகளுடன் போய்வருகிறோம்' என்பது மட்டும்தான் அவர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் இதே கருத்துதான் நிலவியது. சித்தாந்த அடிப்படையில் நானும் சுரேந்திரனும் ஆசாத்தின் கருத்துக்கு உடன்பட்டோம்.

நான் சில வேளைகளில் ஆசாத்தை கிண்டலடிப்பதுண்டு: "பயப்படாதீர்கள், காங்கிரசும் பிரிட்டிஷ் அரசாங்கமும் உடன்பாடு கண்டுவிட்டால் நாம் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமிருக்காது. உங்கள் பெயர் மிகவும் பிரபலமாகிவிட்டது. இன்ஸ்பெக்டர் தொப்பியும் யூனிபார்மும் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையாவது காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொள்ளாமலா இருப்பார்கள். உங்களுக்கு இன்ஸ்பெக்டர் போஸ்டு நிச்சயம் கிடைக்கும்"

இன்ஸ்பெக்டர் பதவிக்குத்தான் லாயக்கு என்று நான் சொன்னவுடனே ஆசாத் கிளர்ந்தெழுந்தார். "போடா கழுதை! போலீஸ் ஆபீசர் உத்தியோகமாம்! உனக்கெங்கடா கிடைக்கும்?". நான் கிண்டலைத் தொடர்வேன்: "நீங்கள் இன்ஸ்பெக்டராகிவிட்டால், பிறகு எங்களுக்குச் சிபாரிசு செய்யாமலா இருப்பீர். நான் குறைந்தபட்சம் ஒரு சப்-இன்ஸ்பெக்டராகவாவது ஆவேன்"

ஆசாத்திடம் நேரிலும், அவருடைய நெருங்கிய சகா பகவந்தாஸ் மகெளர் தலைமறைவுக் காலத்தில் ஷெல்டர் (அடைக்கலம்) அளித்த மாஸ்டர் ருத்ர நாராயண்ஜி போன்றவர்களிடமிருந்தும் தெரிந்து கொண்ட தகவல்களின்படி ஆசாத் மத்திய இந்தியாவில் சாடுவா தாலுக்காவில் பாவரா கிராமத்தில் தான் பிறந்தார். அன்றைக்கு இந்த கிராமம் அலிராஜ்கபூர் என்ற சமஸ்தானத்தில் இருந்தது. ஆசாத்தின் தகப்பனார் பெயர் பண்டிட் சீதாராம் திவாரி; தாயார் பெயர் ஜெக்ராணி தேவி. திவாரியின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. எனவே தன்னுடைய மைத்துனர்களான சிவானந்தனுடனும், ராமபிரசாத் மிஸ்ராவுடனும் வசித்து வந்தார். தாராள மனப்பான்மை மிக்க பக்தி நிஷ்டை மிகுந்த ஒரு பிராமணராக இருந்தவர் அவர். தீட்சண்ய குணம் படைத்தவரும் யாருடைய பேச்சுக்கும் கட்டுப்படாதவராகவும் இருந்தார். ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டையிட்டு உன்னாவிலிருந்து அலிராஜ்கபூருக்கு வந்தார். அங்கு ஒரு தோட்டத்தின் பாதுகாப்புப் பணியை எட்டு ரூபாய் சம்பளத்திற்கு மேற்கொண்டிருந்தார். அந்தக்காலத்தில் சம்பளம் என்பதெல்லாம் இவ்வளவுதான் வழக்கிலிருந்தது. உணவு பண்டங்கள் துணிமணிகள் எல்லாம் விலைமலிவாக கிடைத்தன.

குழந்தைப் பருவத்தில் ஆசாத் 'நல்ல பையனாகத் தான்' இருந்தார். தின்பதிலும் விளையாடுவதிலும் தீராத ஆர்வம் கொண்டிருந்தார். வெல்லம் தின்பதென்றால் அவருக்குக் கொள்ளை ஆசை. விளையாட்டுத் துப்பாக்கியால் நாட்டுவெடிப் பொருட்களை நிரப்பிச் சுடுவதுதான் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால் இந்த விளையாட்டுக்குப் போதுமான பணம் கிடைக்கவில்லை. ஒரு நாள் தோட்டமே தனக்கு சொந்தம் என்ற தோரணையில் ஏராளமாகப் பழங்களைப் பறித்து வெல்லத்திற்காகவும், நாட்டுவெடிப் பொருட்களுக்காகவும் விற்றுவிட்டார். தந்தையின் பார்வையில் அது மன்னிக்க முடியாத குற்றமாகும். தகப்பனார் மகனைத் தாறுமாறாக அடித்துவிட்டார். பார்த்துக் கொண்டிருந்த தாயாரின் உள்ளம் உருகியது. ஆசாத்தின் தன்மானம் தொடர்ந்து அங்கு வசிக்க அவரை அனுமதிக்கவில்லை. கல்வி கற்க வேண்டுமென்ற அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்தது. தாயார் மிகவும் சிரமப்பட்டுச் சேமித்து வைத்திருந்த பதினோரு ரூபாய் பணத்தை மகனுக்குக் கொடுத்தார். ஆசாத் கல்வி மையமான காசி நகருக்கு ஓடிப்போய்விட்டார். அங்கு அமரம், லெகுகௌமுதி போன்றவற்றை உருவிவிட்டுக் கொண்டிருந்தபோது காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கத்தால் கவரப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதிமூன்று அல்லது பதினான்கு இருக்கலாம்.

காங்கிரசின் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து முதன் முதலாகக் கைது செய்யப்பட்டபோது கைவிலங்கின் வளையங்களுக்குள்ளிருந்து உருவக்கூடியதாக மிகவும் மெலிதாக இருந்தன அவருடைய கைகள். விலங்கிலிருந்து கைகளை உருவிப் போலீசாருக்கு ஆசாத் போக்குக் காட்டி அவர்களை ஏமாளிகளாக்கினார். அதன் விளைவு இரண்டு கைகளையும் ஒரே வளையத்திற்குள் நுழைத்து விலங்கிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! கோர்ட்டில் மாஜிஸ்ட்ரேட் ஏளனம் செய்தார்: "சுண்டைக்காய் அளவு கூட வளரவில்லை வந்து விட்டான் புரட்சி நடத்த! ஓடிப்போடா இங்கிருந்து!" இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஆசாத் மாஜிஸ்ட்ரேட்டைத் திட்டித்தீர்த்தார். அந்தச் சிறார் பருவத்திலே ஆசாத்தைச் சிறையில் அடைக்க முடியாது. எனவே பிரிட்டீஷ் சர்க்காரின் சட்டத்தைப் பேணுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செயலாற்றும் மாஜிஸ்ட்ரேட் சிறுவன் ஆசாதைச் சிறைக்கு அழைத்துச் சென்று பன்னிரெண்டு முறை பிரம்படி கொடுக்குமாறு தீர்ப்பளித்தார். இந்தத் தண்டனைக்குப் பிறகு சிறுவன் சரிப்பட்டு விடுவான் என்று மாஜிஸ்ட்ரேட் எண்ணியிருப்பார்.

கோர்ட்டு உத்தரவுப்படியான பன்னிரெண்டு பிரம்படியின் 'மகாத்மியம்' பலருக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. பள்ளிக்கூடத்தில் குறும்புத்தனம் செய்யும் மாணவனுக்களிக்கப்படும் 'பிரம்படி சிகிச்சை' தான் இது என்று யாரும் நினைக்க வேண்டாம். குற்றம் சாட்டப்பட்டவரை சிறைக்கு அழைத்துச் சென்று உடைகளை முழுவதும் அவிழ்த்து விடுவார்கள். பிறகு ஒரு முக்காலியுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு விடுவார்கள். முதுகிலும் பிருஷ்டத்திலும் மருந்து தேய்த்த துணியைப் பத்துப் போடுவதைப்போல் வைத்துப் பிரம்பைத் தண்ணீரில் முக்கித், துப்புரவுத் தொழிலாளிகளை விட்டு அடிக்கச் சொல்வார்கள். ஜெயிலர் எண்ணுவதற்கேற்பத் துப்புரவுத் தொழிலாளி கையை நீட்டிப் பிரம்பால் விளாசி விளாசி அடிப்பர். முதல் அடியிலேயே பிருஷ்டத்திலிருந்து ரத்தம் தெறிக்க ஆரம்பித்து விடும்; பதினான்கு வயது ஆசாத்துக்கு இவ்வாறுதான் பிரம்படி அளிக்கப்பட்டது. ஆசாத் என்ற சிறுவன் ஒவ்வொரு அடி விழும்போதும் 'இங்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தான்.

பிரம்படிபட்டு சிறையிலிருந்து வெளியே வந்த ஆசாத் முன்னைவிடப் பேரார்வத்துடன் போராட்டத்தில் குதித்தார். அப்போதுதான் காகோரி குழுவின் தோழர்களுடன் குறிப்பாக மன்மநாத் குப்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது. காகோரி குழுவின் புகழ் பெற்றதும் துணிச்சல் மிகுந்ததுமான ரெயில் கொள்ளையில் சர்க்கார் கஜனாவைக் கொள்ளையடிப்பதில் அவரும் பங்கேற்றிருந்தார், கைது செய்ய ஆரம்பித்ததும் ஆசாத் தலைமறைவாகி விட்டார். சிறு பருவத்திலேயே அவர் மிகவும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் மிக்கவராக இருந்தார். எனவே தோழர்கள் அவரை கியூக் சில்வர்(ரசம்) உடன் ஒப்பிட்டனர். ராம பிரசாத்துடன் அவர் சில அரசியல் கொள்கைகளில் (மணி ஏக்சன்) பங்கேற்றிருக்கிறார். புரட்சிகரமான கொள்கைகளில் பெண்களின் மீது கை வைப்பதோ அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடிப்பதோ வழக்கமில்லை.

அவருடைய அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்கும்போது கல்வி என்றாலே சமஸ்கிருதம் கற்பதுதான். அதனால் கூட சமகால பொருளாதார சமூக அரசியல் வாழ்க்கையில் எத்தகைய பயனும் கிடையாது. ஒருமுறை அரசியல் உத்வேகம் பெற்றுவிட்டால் தேசத்தின் விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர வேறு மனத்தில் வாழ்க்கையின் பெரும்பேறே அன்னிய சர்க்காரின் கூலிப் போலீசாருடன் போராட்டக்களத்தில் மோதி உயிர்துறப்பதுதான்; கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் சொந்தமாக வாதாடித்தான் போராடவேண்டியிருக்கும் என்பதைக்கூட அவர் நினைவிற்கொள்ளவில்லை. தெளிவான திடமான நோக்கமே போராடி உயிர் துறப்பதுதான் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் கோர்ட்டில் குரங்காட்டமாட என்னால் முடியாது என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு" எட்டுத் தோட்டாக்களுடைய பிஸ்டல் வத்திருக்கிறேன். அதேபோல் இன்னொன்றும் இருக்கிறது பதினைந்து தோட்டாக்களையும் எதிரியின் மீது ஏவுவேன். பதினாறாவது தோட்டா இங்கே பாயும்" என்று பிஸ்டல் குழாயை தன்னுடைய நெற்றிப் பொட்டில் வைத்து கூறுவார்.

அன்று எல்லா இடங்களிலும் பேசப்பட்ட உடன்படிக்கைப் பிரச்சனை ஆசாத்தை மட்டும் பதிக்காமல் இருக்குமா என்ன? ஒரு நாள் இரவில் அவர் கூறினார்: "காங்கிரஸ் இறுதியில் உடன்படிக்கை செய்து கொண்டால் நான் பேஷாவர் வழியாக நாட்டை விட்டு ஓடிவிடுவேன். வசீரிக்களுக்கும் அஃபரீதிக்களுக்கும் (எல்லை மாகாணங்களின் இரண்டு பிரிவுகள்) ஆங்கிலேயர்களுடன் ஓர் உடன்படிக்கை சாத்தியமற்றதாகும். அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போராடுவேன். சோகன், அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் தனிமையை நாடுவதில்லை. நீங்களும் பிரகாசவதியும் இணைந்தது நல்லதாகி விட்டது: வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் பின்னிட்டுச் செல்ல, பெண்களும் ஆண்களும் ஒன்று சேர வேண்டும். நான் இனி இந்த விசயத்தை பற்றி யோசித்தால்கூட அத்தகைய பெண் எங்கிருக்கிறாள்? அக்காவை (சுசீலா) பார்க்கவில்லையா? தன்னம்பிக்கையான இனம். மூலையால் மட்டும் மனிதனால் என்ன செய்ய முடியும்? உண்மையில் அக்கா அசாதாரணமானவர்தான்.இருப்பினும் அது போதாது காங்கிரஸ்காரர்கள் ஆங்கிலேயர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டால் கூட, எல்லையைக் கடந்து வெளியேறிச் செல்லத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். "இருவர் தோள்களிலும் துப்பாக்கியிருக்க வேண்டும். ஒரு சாக்குமூட்டை நிறைய வெடிப் பொருட்கள் எடுத்துச் செல்லவேண்டும். எதிரிகள் எங்களை வளைத்துக் கொண்டால் அவள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பித் தர வேண்டும். நான் 'பட் , பட்' என்று சுட்டுத் தள்ளிக் கொண்டிருப்பேன். இவ்வாறு இருவரும் உயிர் நீத்துவோம்".

புரட்சியாளர்களுக்குப் பிரம்மச்சரியம் தான் பொருத்தமானது என்று வெகுநாட்கள் வரை ஆசாத் பேசிக்கொண்டிருந்தார். பெண்ணின் 'ஈர்ப்பு' அழிவிற்கும் கஷ்டங்களுக்கும் காரணமாகி விடும். வேடிக்கையாக பெண்ணின் மறுபெயராக 'காந்தம்' என்ற சொல்லையே பயன்படுத்தினார். ஒரு காலத்தில் சமஸ்கிருதக் கல்வி தான் உண்மையான கல்வி என்று எண்ணி பிறகு அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியின் வெளிச்சத்தில் கருத்தை மாற்றிக்கொண்டதைப் போலவே, பெண்களைப் பற்றிய ஆசாத்தின் கருத்தும் பெருமளவிற்கு மாறியிருந்தது.

தன்னுடைய தலைமறைவு வாழ்கையில் பெருமளவு நாட்கள் ஜான்சியில் பிரபல சிற்பக் கலைஞரான மாஸ்டர் ருத்ரநாராயண்ஜியின் வீட்டில்தான் ஆசாத் தங்கியிருந்தார். அந்த வீட்டை அவர் பெருமளவு நம்பியிருந்தார். எனவே மாஸ்டர்ஜியின் விருப்பத்திற்கேற்ப ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள மாஸ்டர்ஜிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆசாத்தின் சிலை வடிக்க மாஸ்டர்ஜி விரும்பியதே அதற்குக் காரணம் அவர் சிலையை வடித்து அரிய செல்வத்தைப் போல் இன்றைக்கும் பாதுகாத்து வருகிறார்.

மனைவியைப் பொதுப் பணிகளில் பங்கேற்க அனுமதிக்காததால் மாஸ்டர்ஜி அடிக்கடி ஆசாத்திடமிருந்து வாங்கிக்கட்டிக் கொள்வார். ஜான்சியில் போலீஸ் மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் செய்தி அனுப்பவும் ஏற்கவும் மாஸ்டர்ஜியின் இல்லத்தரசியையே ஏற்பாடு செய்தோம்.

ஆசாத் அவர்களின் புலமையைப் பற்றியும் சிந்தனைத்திறனைப் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன். ஆசாத் இந்துஸ்தான் சமாஜ்வாதி பிரஜா தந்திரசேனா (இந்துஸ்தான் சோஷலிஸ்டு குடியரசுப்படை) என்ற அமைப்பின் சித்தாந்தத் தலைவர் இல்லை. அதன் படைப் பிரிவுத் தலைவர் என்பதே உண்மை. இந்துஸ்தான் சோஷலிஸ்டு ரிப்பப்ளிக் ஆர்மி (H.S.R.A) தலைமைத் தளபதியாக (கமாண்டர் - இன் - சீஃப்) இருந்தார். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. புத்தகம் படிப்பதை விட பிறர் படிக்கக் கேட்டு புரிந்துக் கொள்வதில் திறன் பெற்றிருந்தார். கூரிய கேள்வி ஆற்றலும் அறிவாற்றலும் மிக்கவராக இருந்தார். அறிவுக் கூர்மையைப் போலவே அவருடைய குணமும் சரளமானது. எனவே முன் குறிப்பிடாத கட்டங்களில் நபர்களைப் புரிந்து கொள்வதில் சருக்கியிருக்கிறார். படைத்தளபதி என்பதால் தன்னுடைய உயிரை எதற்காக பலியிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர் என்று எண்ணி விடாதீர்கள். சித்தாந்த துணையின்றி புரட்சி இயக்கம் முன்னேற இயலாது 'இந்துஸ்தான் சமாஜவாதி பிரோஜாதந்திரசேனா'வின் சித்தாந்த பகுதியை அதன் 'சமாஜ்வாதி' 'பிரஜாதந்திர' போன்ற ஓசைச் சொற்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம் இந்த அமைப்பின் சித்தாந்தபூர்வமான குறிக்கோளுடன் ஆசாத் பெருமளவு இரண்டறக் கலந்திருந்தார். அதற்காக உயிர் தியாகம் செய்வதில் அவருக்கு மகிழ்ச்சியே தவிர வேறில்லை.

1931ன் துவக்க விஷயங்களைத்தான் இது வரை கூறி வந்தேன். வட்டமேசை மாநாட்டில் ஏற்பட இருக்கும் உடன்படிக்கை தொடர்பான அபிலாஷைகளையும், ஐயங்களையும் பற்றி ஜவகர்லால் நேருவுடன் விவாதிப்பதற்காக ஆசாத் ஒருமுறை மோதிலால் நேருவையும் சந்தித்திருந்தார். மோதிலாலை அவர் அரசியல் அல்லது சித்தாந்த விஷயங்களுக்காகச் சந்திக்கவில்லை. மோதிலால் திறந்த மனம் படைத்தவர். காங்கிரஸ் இயக்க விஷயங்களை நேரடியாக கையாள்பவராக இருப்பினும், புரட்சியாளர்களுக்கு உதவுவதை சட்டத்திற்குப் புறம்பானதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. காகோரி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக சட்ட உதவியைக் கொண்டு செல்வதில் அவர் பெருமளவுக்குத் துணையிருந்திருக்கிறார். ஆசாத்தைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு மோதிலால நேருவே ஆசாத்தை நேரடியாகச் சந்தித்துப் பேச அழைத்திருக்கக்கூடும்.

ஆசாத்துடனான சந்திப்பைப்பற்றி ஜவகர்கலால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: "என்னைச் சந்திக்கத் தயாரான முக்கிய காரணம், நாங்கள் சிறையிலிருந்து விடுதலையானவுடன் சர்காருக்கும் காங்கிரசுக்கும் இடையே ஏதேனும் உடன்படிக்கை ஏற்படும் என்ற நம்பிக்கை சாமான்ய மக்களிடம் ஏற்பட்டதினால் தான். உடன்படிக்கை ஏற்படுமாயின் அவருடைய குழுவில் இருக்கும் ஆட்களுக்கும் ஏதேனும் அமைதி கிடைக்குமா என்றறிய அவர் விரும்பியிருந்தார். அப்போது தேசத்துரோகிகளிடம் போலத்தான் தங்களிடம் பழகுவார்களா? எல்லா இடங்களிலும் இன்றைய மாதிரியே கண்காணிக்கப்படுவோமா? அவர்களுடைய தலைக்கு விலை கூறப்பட்டுக் கொண்டேயிருக்குமா? அவர்களும் நிம்மதியாக தங்களுடைய பணியில் ஈடுபட முடியுமா? தனக்கும் நண்பர்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளால் பயனில்லை என்றும், அது வீண் என்பதை உணர்ந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் அமைதி வழிகளில் இந்தியா விடுதலை பெற முடியும் என்பதை அவர் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. எதிர்காலத்தில் எப்போதாவது ஆயுதப் புரட்சிக்கான சந்தர்ப்பம் வரலாம் என்றும் ஆனால் அது பயங்கரவாத நடவடிக்கையாக இராதென்றும் அவர் கூறினார்".

இதைப்பற்றி ஜவகர்லால் நேரு மேலும் தொடர்ந்தார்: " பயங்கரவாத நடவடிக்கைகளில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று ஆசாத்தின் வாயிலிருந்தே கேட்க முடிந்ததனாலும் பிறகு அதற்கு தடையங்கள் கிடைத்ததனாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் பழைய பயங்கரவாத ஊழியர்களெல்லாம் அகிம்சாவாதிகளாகவோ, பிரிட்டிஷ் சர்க்காரின் பக்தர்களாகவோ மாறிவிடுவார்கள் என்று இதற்குப் பொருளல்ல - ஆனால் இப்போது இவர்கள் பயங்கரவாதிகள் மொழியில் சிந்திக்கவில்லை. அவர்களில் பலருடைய சிந்தனைப் போக்கும் குறிப்பாக பாசிசமாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்".

நேருஜியின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த மேற்கோளைப்பற்றி விவாதிக்கும் போது அந்தப் புத்தகம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இந்த நூல் பெரும்பாலும் 1934 அல்லது '36' ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆசாத் அதற்குள் உயிர்பலியாகிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவருடன் மேற்கொண்ட இன்னொரு சந்திப்பைப் பற்றி நேருஜி எழுதவேயில்லை, நினைவில்லை என்று கூற முடியாது. 1938 ல் புவாலியில் நான் நேருஜியைச் சந்தித்த போது இதை நினைவூட்டினேன். 1937 ல் ஆங்கிலத்தில் இந்த நூலை முதன் முதலாக நைனி சிறையில் படித்தபோது என் மனதில் இது தட்டுப்பட்டது. குறிப்பாக எங்களுடைய சிந்தனைப்போக்கை அவர் பாசிசம் என்று அழைத்தாரல்லவா, நேருஜியுடன் ஏற்பட்ட சந்திப்புக்குப் பிறகு மேற்படி நிகழ்ச்சியைப்பற்றி அலகாபாத் அங்காடி அறைக்குள் ஆசாத் எங்களிடம் விளக்கினார்.அப்போது அவருடைய உதடுகள் கோபத்தால் துடித்துக் கொண்டிருந்தன். நேருவின் பெயரை ஒரு வசைச்சொல்லுடன் சேர்த்து அவை சொன்னார்: "......நம்மை பாசிஸ்டு என்கிறான்......." ஆசாத்தின் நோக்கம் நேருஜியை வசைபாடுவதல்ல. சிறு வயதிலிருந்தே அவருடைய நாக்கு நுனியில் இத்த்கைய வார்த்தைகள் இடம் பெற்றுவிட்டன. சீரியசாக இருக்கும்போதும் கோபப்படும்போதும் வசைச்சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார். பேசும்போது கவனக்குறைவால் சில நரகல் வார்த்தைகள் வந்து விழுந்துவிடும், அவ்வளவுதான். தானும் தன்னுடைய தோழர்களும், பயங்கரவாத நடவடிக்கைகளை வீணெனக் கருதுவதாக அவர் நேருஜியிடம் சொல்லியிருக்க மாட்டார். தாங்கள் பயங்கரவாதிகள் இல்லை, ஆயுதப் புரட்சிக்காக உழைப்பவர்கள் என்றுதான் கூறியிருப்பார். இந்த உண்மையை நேருஜியின் அடுத்த வாசகங்களில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம். "அமைதி வழியில் இந்தியா சுத்ந்திரம் பெற முடியும் என்று ஒப்புக்கொள்ள அவர் தயாரில்லை. எதிர்காலத்தில் எப்போதாவது ஆயுத்ப் புரட்சிக்கான சந்தர்ப்பம் வரலாம் .." பண்டித நேரு ஆசாத்தின் வார்த்தைகளில் எப்படி; பாசிச வாடையை கண்டுபிடித்தார் என்பது புரியவில்லை. பாசிசம் என்பது ஆட்சியை அடக்கி ஒடுக்குவதைச் சார்ந்த ஒரு திட்டமாகும். நாங்களோ ஆட்சி புரியவேண்டும் என்பதைப்பற்றி எப்போதுமே கனவு கண்டதில்லை. நேர்மாறாக ஆங்கில அரசின் அடக்குமுறைக் கொள்கையை அதாவது பாசிசத்தை எதிர்க்கத்தான் செய்தோம்.

ஆசாத்துக்கு ஆங்கிலம் பேச வராது. ஒரு வேளை நேருஜிக்கு ஆசாத்தின் வார்த்தைகள் புரியாமலிருந்திருக்கலாம். உடன்படிக்கை ஷரத்துக்களில் லாகூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பகத்சிங் போன்றவர்களின் விடுதலைப் பிரச்சனையையும் காந்திஜி உட்படுத்த வேண்டும் என்பதைத்தான் நேருஜியுடன் பேசும்போது ஆசாத் முக்கியமாக முன் வைத்தார். இது ஆசாத்தின் வேண்டுகோள் மட்டுமல்ல பொதுமக்களின் விருப்பமும் கூட காந்திஜி அத்தகைய ஒரு நிபந்தனையை முன்வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நேருஜி முற்றாக நிராகரித்துவிட்டார்.

- யஷ்பால்.

நன்றி : யஷ்பால்

2 comments:

ரசிகன் said...

அகிம்சை-ன்னா என்னாங்க...

http://rasigan111.blogspot.com/2007/10/blog-post_7184.html

said...

அகிம்சையின் அனுகுமுறை என்னவென்றால், அகிம்சாவாதி எதிரியிடம் அடி வாங்கனும், திருப்பித் தாக்க கூடாது. நாட்டுக்காக ஆயுதம் தாங்கி போராடும் வீரர்களை பயங்கரவாதிகள்னு கண்டிக்கனும், அவங்களை காட்டிக் கொடுக்கனும். ராட்டை சுத்தனும், பஜனை பாடனும் வெள்ளக்காரனா பாத்து ஏதாவது கொடுத்தா போதும்னு காத்து கிடக்கனும். பல ஆயிரம் மக்கள் கூடி நின்று சில நூறு போலீசுக்கிட்ட அடி வாங்கியே சாகனும். தன்னைத் தானே இம்சிக்கிறது தான் அகிம்சை. எறும்பு கூட நசுக்கினா கடித்து அதன் எதிர்ப்பை காட்டும் ஆனால் அகிம்சாவாதி வீரத்தை உதை வாங்கி காட்டனும்.