

முதலாளித்துவத்தின் கோர பிடிக்குள் இன்று உலகமே மூச்சுத்திணறி கொண்டிருக்கிறது. உலகத்தின் முதல் சோசலிச குடியரசை தந்திரம் செய்து வீழ்த்தி வீழ்ந்துவிட்டதாக கதை கட்டிவிட்ட முதலாளித்துவ நரிகளும் வால் ஸ்ட்ரீட்டின் அதிபதிகளும் இன்று தலையில் துண்டைப்போட்டு மக்களின் கண்களில் படாமல் மறைந்து மறைந்து போகின்றனர். முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்தியம் இன்று உலகிற்கு அளித்த கொடை எண்ணிலடங்காது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களின் தினசரி வருமானத்தை ஒரு டாலருக்கும் குறைவாக ஆக்கியது முதற்கொண்டு இங்கே இந்தியாவில் 83.4 கோடி இந்தியர்களின்
தினசரி வருமானத்தை 20 ரூபாய்க்கும் கீழாக குறைத்திட்டது வரை பட்டியல் நீள்கிறது. நம் நாட்டின் விலைவாசி உயர்வுக்கு காரணமான முன்பேர வர்த்தக சூதாட்டத்தில் ஆரம்பித்து குறைந்த கூலி உழைப்புக்காக ஊதிப்பெருக்கி இப்போது வெடித்துக்கிடக்கும் ஐ.டி துறையாகட்டும் எல்லாம் நம் கண் முன்னே அப்பட்டமாய் நடந்துகொண்டுதானிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை நரகத்திற்குள் தான் நடத்துகின்றனர். இதற்கு அவர்களுக்கு தெரிந்த காரணம் விதி, ஜாதகம், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இவை மட்டுமே. முதலாளித்துவத்தை வீழ்த்த ஊதிய உயர்வு போராட்டங்கள் நடத்துவதும், பட்டினி போராட்டம் இருப்பது, ஈரத்துணி கட்டி கோமாளித்தனம் செய்வதும் நாமம் போட்டுக்கொண்டு காட்சித் கொடுப்பதும் தான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும்வழி. எந்த ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் முதலாளித்துவத்தை வீழ்த்தப்போவதில்லை, அதை வீழ்த்தாமல் இந்த சமுதாய சிக்கல்கள் தீரப்போவதில்லை. எனவே கோர பசி கொண்ட திமிங்கிலத்தை வீழ்த்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரண்டு போராடுவதே சிறந்த வழி ஒரே வழி.